Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)
Showing posts with label Athikaaram_131. Show all posts
Showing posts with label Athikaaram_131. Show all posts

நீரும் நிழலது இனிதே புலவியும்

 

குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
நீரும் - நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

நிழலது - நிழல் -  சாயை; எதிரொளி; அச்சு; குளிர்ச்சி; அருள்; ஒளி; நீதி; புகலிடம்; கொடை; செல்வம்; மரக்கொம்பு; நோய்; பேய்.

இனிதே - இனிது  - இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

புலவியும் - புலவி - ஊடல்; வெறுப்பு.

வீழு - vīẕu  -வீழ், கிறேன், வீழ்ந்தேன், வேன், வீழ, v. n. To fall, [poetic form of விழு.] 2. v. a. To desire, ஆசைவைக்க. 3. To long for, to desire earnestly, மேவ. (p.)

வீழுநர் - ஆசை வைக்க பட்டவரால்

வீழப்படுவார்க்கு - ஆசையில் விழுந்தோர்க்கு

கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

கண்ணே - இடத்தே

இனிது இனிமை - இன்பந்தருவது; நன்மையானது; நன்றாக

முழுப்பொருள்
(வெயிலின் கீழ் குடிப்பதைக் காட்டிலும்) தண்ணீரை நிழலின் கீழ் அருந்தினால் குளுமையாக மனதிற்கு இனிமையாக இருக்கும். அதுப்போல ஊடல் கூட நம் மனம் விரும்பும் தலைவரிடத்தில் தான் இனிமையாக இருக்கும். 

மேலும் நிழல் என்பது எதிரொளி. அவ்வாறு பொருள் கொண்டால், ஊடலின் இன்பம் ஊடலுக்கு எதிரான கூடலில் உள்ளது என்றும் பொருள் கொள்ளலாம் அதுவும் சரியே. 

பி.கு: என் தலைவனை படுத்துவது (சும்மாவென்று ஊடல் செய்வது, சிணுங்குவது, சின்ன வேலைகள் கொடுத்து இம்சிப்பது, கோபம் ஊட்டுவது போன்றவை) எனக்கு மிக பிடிக்கும் என்று சில மனைவிமார்கள் கூறுவார்கள் (என் உறவுக்காரப் பெண்கள் சிலர் என்னிடம் இதை கூறியுள்ளார்கள்). இக்குறளுடன் பொருத்திப்பார்க்கும் பொழுது, அது ஏன் என்று இப்பொழுது  நன்றாக புரிகிறது புன்னகையுடன் (சற்றுத் தாமதமாக. Better late than never). 

ஒப்புமை
”புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே” (குறுந் 93.4)

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது, ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அது போலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது. (நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையும் உடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது', என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன் கண்ணும் ஒரு துன்பம் உண்டு: புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறுதலால். இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்கத் தலைமகன் அது கண்டு சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

 

குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
நோதல் - பூடுமுதலியவற்றிற்குவரும்கேடு; துன்புறுதல்; நோயுறல்; வருந்துதல்; வறுமைப்படுதல்; பதனழிதல்; எழுத்துமுதலியவற்றின்மழுங்கல்; சாயம்சிதறுகை; வறுமை; வெறுத்தல்.

எவன் - யாவன்; எவ்வண்ணம்; எப்படி; யாது; யாவை; என்ன; ஏன்; வியப்புஇரக்கச்சொல்.

மற்று - ஓர்அசைநிலை; பிறிதின்பொருட்குறிப்பு; வினைமாற்றுக்குறிப்பு; மறுபடியும்; பின்; காண்க:மற்றப்படி.

நொந்து-தல் - nontu-   5 v. intr. நந்து¹-.[K. nondu.] To perish; அழிதல் நூறு கோடிபிரமர்க ணொந்தினார் (தேவா. 1218, 3).  ;; 5 v. tr. நந்து²-.cf. நுந்து-. To trim; தூண்டுதல் நொந்தாத செந்தீ(பதினோ. காரை திருவிரட். 13).  

நொந்தார் - பகைவர்

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

அஃது - அஃறிணைஒருமைச்சுட்டு; அது அப்படி

அறியும் - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

காதலர் - கணவன், தோழன், மகன் என்ற மூன்று நட்பாளர்கள்.

இல்லா - இல்லாத

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

இல்லாவழி - இல்லாதபோது.

முழுப்பொருள்
நான் நொந்தால், அதனை கண்டோ அல்லது அறிந்துக்கொண்டோ அதற்கு தேவையான தீர்வை தேடி அளிப்பவரைப் பெற்றால் நொந்துக்கொள்வதில் ஒரு பயன் உண்டு என்று கருதிகிறாள் தலைவி. அப்படி ஒருவர் நமது வருத்ததை கண்டோ அறிந்தோ அதற்கான தீர்வை வழங்காத பொழுது நாம் நொந்து என்ன பயன்? என்று கேட்கிறாள் தலைவி.

அதாவது தலைவியை விட்டு தலைவன் பிரிந்து சென்றதால் தான் தலைவி வருந்திக்கொண்டு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்திற்கு தலைவனே காரணம். தலைவி வருந்திக்கொண்டு இருக்கிறாள் என்பதை அறிந்துக்கொள்ளாமல், அவ்வருத்தித்திற்கு தான் தான் காரணம் என்று உணராமல் இருக்கும் தலைவனை பெற்றுவிட்டு நொந்து என்ன பயன்? அவருக்கு நம் வருத்தம் தெரியவா போகிறது? அல்லது அவர் தான் வந்து அந்த வருத்தத்தை போக்கப்போகிறாரா? என்று கேட்கிறாள் தலைவி.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்? ('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.).

மணக்குடவர் உரை
யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து. இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

 

குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

உண்டு - உள்ள தன்மையை உணர்த்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரிய ஒரு குறிப்பு வினைமுற்றுச்சொல்; ஓர் உவம உருபு; அற்பத்தைக் குறிக்கும் சொல்; ஊன்றுகோல்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை.

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல்; (வி)ஆராய்; தெளி.

துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.

புணர்வது - புணர்தல் - பொருந்துதல்; கலவிசெய்தல்; அளவளாவுதல்; மேற்கொள்ளுதல்; ஏற்புடையதாதல்; விளங்குதல்; எழுத்துமுதலியனசந்தித்தல்; உடலிற்படுதல்; கூடியதாதல்; தலைவனும்தலைவியும்கூடுதலாகியகுறிஞ்சிஉரிப்பொருள்.

நீடுவது - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

கொல் - இரும்பு; உலோகம்; கொலைத்தொழில்; வருத்தம்; கொல்லன்; கொல்லன்தொழில்; கதவில்தைக்கும்இரும்பு; குறுக்குத்தாழ்; ஐயப்பொருள்தரும்ஓர்இடைச்சொல்; ஓர்அசைநிலை.

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

முழுப்பொருள்
ஊடலின் இன்பம் கூடலில் தெரியும். ஆனால் தலைவனுக்கும் தலைவிக்கும் ஊடலிலும் ஒரு துன்பம் இருக்கிறது. அது என்ன தெரியுமா? தலைவனும் தலைவியும் முயகத்தில் தழுவி கூடிப் புணருக்கும் பொழுது இக்கூடல் நீளுமா நீளாதா என்ற எண்ணமே துன்பமாக அமைந்துவிடும். 

கூடல் நெடுநேரம் இருக்கவேண்டும் என்பதே தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள விருப்பம். ஆனால் இயற்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு காலவரையறை உண்டு. ஆதலால் கூடலின் நேரமும் அளவானதே. ஆனால் அக்கூடல் எவ்வளவு நீளமான நேரமாக இருப்பினும் அது குறைந்த நேரமாகவே தோன்றுகிறது தலைவனுக்கும் தலைவிக்கும். ஆதலால் அவர்கள் கூடலின் நேரம் நீளாதோ என்று ஏக்கப்படுகிறார்கள். கூடல் முடிந்தப்பின்பு மிக வேக முடிந்துவிட்டதே என்று துன்ப்படுகிறார்கள். அதனால் தான் கூடலில் துன்பம் இருக்கிறது. அக்கூடலிற்கு காரணமான ஊடலிலும் துன்பம் ஒன்று இருக்கிறது. 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.).

மணக்குடவர் உரை
குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்: அதுப்போலப் புலவியும் அன்புடையார்மாட்டேயாயின் இனிதாம்.

மு.வரதராசனார் உரை
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை
இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

குறள் 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
துனியும் - துனி - வெறுப்பு; சினம்; புலவிநீட்டம் (ஊடல்மிகுதி); பிரிவு; துன்பம்; அச்சம்; நோய்; குற்றம்; இடையூறு; ஆறு; வறுமை.

புலவியும்புலவி - ஊடல்; வெறுப்பு.

இல்லாயின் - இல்லையானால்

காமம் - ஆசை, அன்பு, விருப்பம்; இன்பம்; புணர்ச்சியின்பம்; காமநீர்; ஊர்; குடி; இறை.

கனியும் - கனி - பழம்; கனிவு; சாரம்; இனிமை; கனிச்சீர், மூவகைச்சீரில்இறுதியிலுள்ளநிரையசை; பொன்முதலியனஎடுக்கும்சுரங்கம்.

கருக்காயும் - கருக்காய் - பிஞ்சு; பதர்நெல்; எள்ளுகொள்ளுமுதலியவற்றின்மாறு.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

முழுப்பொருள்
மிகுதியான ஊடலான துனியும், செல்லமான சிறிய ஊடலான புலவியும் காதலில் இல்லாமல் போனால் காமத்தில் (புணர்தலில் /கூடற்கின்பம்) அளவுக்கு மிகுதியாய் பழுத்து புளிக்கும் கனியை போன்றும் துவர்கும்  பிஞ்சை  (இளங்காய்) போன்றும் பயனற்றதாக இனிய/நற் சுவையற்றதாக ஆகிவிடும். 

ஒப்புமை
”இன்ன துனியும் புலவியும் ஏற்பிக்கும்” (பரி 20.96)

“திருவே யனையாள் முகமே தெரியின்
கருவே கனியே விளைகா மவிதைக்
கெருவே” (கம்ப.கடிமணப் 14)

”முயங்காக்கால் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றாம் காமம் - வயங்கோதம்
நில்லாத் திரையலைக்கும் நீள் கழித் தண்சேர்ப்ப
புல்லாப் புலப்ப தோர் ஆறு” (நாலடி:391)

எனக்கு ஒரு குறுந்தொகை பாடல் நினைவுக்கு வருகிறது. அதில் பெரும் பழம் பயனற்று போகும் என்று கூறப்பட்டு உள்ளது ஏனெனில் பழத்தின் கணம் அதிகமாகி கீழே விழுந்து சிதறிவிடும். 

18. குறிஞ்சி - தோழி கூற்று 
வேரல் வேலி வேர்க்கோட் பலவின் 
சாரல் நாட செவ்வியை ஆகுமதி 
யாரஃ தறிந்திசி னோரே சாரல் 
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் 
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. 
                    -கபிலர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால். இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

சாலமன் பாப்பையா உரை
வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை

குறள் 1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
தகை - அழகு; அன்பு; அருள்; கவசம்; குணம்; தடை; தகுதி; பொருத்தம்; ஒப்பு; மேம்பாடு; பெருமை; நன்மை; இயல்பு; நிகழ்ச்சி; கட்டுகை; மாலை; தளர்ச்சி; தாகம்; மூச்சிழைப்பு.

நல் - நல்ல; nal   நல்ல, adj. (நன்மை) good, fair; 2. abundant, much, மிகுந்த; 3. auspicious. (In combin, ல் is changed into ற் before க, ச, த, ப & may be changed into ன் before ம & ந, sometimes also before க & ச).

நலத்தகை - மிகுந்த அழகும் குணமும் அன்பும் பொருத்தமும் உடைய

நல்லவர்க்கு - நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்; காண்க:நல்லபாம்பு.

ஏஎர் - அழகு

புலத் - pula   VII. v. i. be bashful towards the husband, feign dislike, பிணங்கு; 2. utter ravings as a delirious lover, ஊடு.

புலத்தகை - ஊடல் கொள்ளும் பண்பு

பூ - ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின்நுதற்புகர்; யானையின்நெற்றிப்பட்டம்; கண்ணின்கருவிழியில்விழும்வெண்பொட்டு; விளைவுப்போகம்; ஆயுதப்பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த்துருவல்; சூரியனின்கதிர்படுதற்குமுன்னுள்ளபூநீற்றின்கதிர்; இலை; காண்க:முப்பூ; இந்துப்பு; வேள்வித்தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.

அன்ன - அத்தன்மையானவை; ஓர் அஃறிணைப் பன்மைக்குறிப்பு வினைமுற்று; ஓர்உவமஉருபு.

கண்ணார் - (அழகிய) கண்களை உடைய

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
நல்ல குணமும் தன்மையும் உடைய ஒரு பெண்ணுக்கு காதல் உறவில் அழகு சேர்ப்பது எது தெரியுமா? பூ போன்ற கண்களை உடைய மென்மையானவள் ஆயினும் தலைவனுடன் கூடல் சிறக்க மேலும் சுவைக்க வேண்டுமெனில் கொஞ்சம் ஊடலும் தேவை. ஆதலால் தலைவியின் மனதில் ஊடல் பழகி தலைவனுடன் ஊடல் செய்து பின்பே கூட வேண்டும். அக்கூடல் இன்னும் சுவைக்கும். அதுவே அவளுக்கு அழகாகும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.).

மணக்குடவர் உரை
நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல். நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

ஊடி யவரை உணராமை வாடிய

குறள் 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
ஊடல் -  ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

ஊடி - பொய் சினம் கொண்டு பேசிக்கொள்ளாமல்

ஊடியவரை - ஊடல் செய்த தலைவன்

உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்

உணராமை - அறியாமல்

வாடிய - வாடுதல் - உலர்தல்; மெலிதல்; பொலிவழிதல்; மனமழிதல்; தோல்வியடைதல்; கெடுதல்; நீங்குதல்; குறைதல்; நிறைகுறைதல்.

வள்ளி - கொடிவகை; நிலப்பூசணி; தண்டு; கொடிபோன்றுதொடர்ந்திருப்பது; கைவளை; தொய்யிற்கொடி; காண்க:வள்ளித்தண்டை; முருகக்கடவுளின்தேவி; குறிஞ்சிநிலப்பெண்; முருகக்கடவுட்குமகளிர்மனநெகிழ்ந்துவெறியாடுதலைக்கூறும்புறத்துறை; குறிஞ்சிமகளிர்கூத்துவகை; சந்திரன்.

முதல் - ஆதி; இடம்முதலியவற்றில்முதலாயிருப்பது; காரணம்; மூலகாரணனானகடவுள்; முதலானவன்; ஏற்றம்; மூலதனம்; வேர்; கிழங்கு; அடிப்பாகம்; மரம்முதலியவற்றின்அடி; இடம்; அகப்பொருட்குரியநிலம்; பொழுதுகளின்இயல்பு; பிண்டப்பொருள்; செலவுக்காகச்சேமிக்கும்பொருள்; இசைப்பாட்டுள்ஒன்று; சொத்தின்கொள்முதல்விலை; பன்னிருஉயிரெழுத்தும்பதினெட்டுமெய்யெழுத்தும்; தொடக்கமாகவுடைய; ஏழாம்வேற்றுமையுருபு; ஐந்தாம்வேற்றுமையுருபு; பத்திரம்.

அரிந்தற்று
அரிதல் - அறுத்தல்.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.

முழுப்பொருள்
உறவுகளில் தலைவனும் தலைவியும் ஒருவரோடு ஒருவர் ஊடுகின்றனர். ஆனால் அப்படி ஊடியப்பிறகு அதனை சிறிது நேரத்திற்குள் முடிக்காமல் ஊடலை வளர்ப்பதென்பது வாடிய கொடியினை அதன் அடியில் அறுத்தல் போன்றதற்கு ஒப்பாகும். அவ்வுறுவு அறுபட்ட அக்கொடியைப் போன்று பிழைக்காது.

காதலில் ஊடல் இருக்கலாம். ஆனால் ஊடலை முடித்து கூடலில் ஈடுபட்டு காதலை வளர்க்கவேண்டும். காதலை வளர்க்க ஊடலை ஏதுவாக பயன்படுத்தவேண்டும். மாறாக ஊடலை வளர்த்தால் உறவே அறுந்துவிடும்.

எனக்குத் தோன்றிய உதாரணம்:
சக்கரைப்பொங்கலில் சிறிதளவு உப்பு இனிமையை தூக்கி காண்பிக்கும். ஆனால் உப்பு அதிகமானால் அது கரித்துவிடும். அது சக்கரைபொங்கலின் இனிமையை வெகுவாக குறைத்துவிடும். அளவு மீறினால் கரித்துவிடும்

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.).

மணக்குடவர் உரை
நும்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை: நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும். இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப் போமேன்ற தலைமகள் கூறியது.

மு.வரதராசனார் உரை
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்

குறள் 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
புலவி - pulavi   n. புல¹-. 1. Sulks;bouderie; ஊடல். புணர்வின் னினிய புலவிப் பொழுதும் (சீவக. 1378). 2. Displeasure; dislike;வெறுப்பு.
அலந்தை - துன்பம்; நீர்நிலை
அலந்தாரை - துன்பம் தந்தவர்
அல்லல் - துன்பம்
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
செய்து  - செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை.
அற்றால் - தன்மை அறிந்து
தம்மைப் - தம் - ஒருசாரியைஇடைச்சொல்;
புல - pul   க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To decline a husband's embraces through bashfulness, or feigned displeasure, பிண ங்க. 2. To be displeased, and keep apart, for a time, as a husband and wife, மனை வியுங்கொழுநனும்வேறுபட. 3. To complain of, to utter ravings, as a delirious lover, ஊட.
புலந்தாரைப் -ஊடியவரை ;
புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.
புல்லா - தழுவாமல் ; புணராமல்
விடல் - முற்றும்நீங்குகை; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
பிரிந்திருந்த தலைவன் பிரிவால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவியை மறுபடியும் வந்து சந்திக்கிறான். அப்பொழுது தலைவி தலைவனிடம் ஊடுகிறாள். இப்படி ஊடிய தலைவியிடம் ஊடலை நீக்கி அவளை தழுவி கூட (புணர) வேண்டும். (அதுவே அந்த துன்பத்திற்கு மருந்தாக அமையும்). அவ்வாறு கூடவில்லை என்றால் அது துன்பத்தில் இருப்போருக்கு மேலும் துன்பத்தை தருவது போல் ஆகும். ஊடலும் அளவு மீறாமல் ஒரு கட்டத்தில் முடித்துக்கொண்டு கூட வேண்டும். அதுவே நன்மை பயக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

மணக்குடவர் உரை
தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவிநீக்கிக் கலவாது ஆடவர் சேறல், பண்டே துன்பமுற்றழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.

மு.வரதராசனார் உரை
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்

குறள் 1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
புலவி - ஊடல்; வெறுப்பு

புல்லுதல் - தழுவுதல்; புணர்தல்; பொருந்துதல்; வரவேற்றல்; ஒத்திருத்தல்; ஒட்டுதல்; நட்புச்செய்தல்.

புல்லாது - தழுவாது, புணராது, பொருந்தாது, வரவேற்றாது, நட்புச்செயாது

இரா - இரவு

அப் - அந்த

புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.
புலத்தை - அந்த மன வேறுபாட்டை; ஊடலை, துன்புறுத்தலை

அவர் - அவன், அவள் என்பதன் பன்மைச்சொல்; ஒருவரைக் குறிக்கும் பன்மைச்சொல்.

உறும் - கொள்ளும்

அல்லல் - allal   n. prob. அல்லு-. [T. allari,K. alla, M. allal.] Affliction, distress, evil, misfortune, privation; துன்பம் அழிவின்க ணல்லலுழப்பதா நட்பு (குறள், 787).

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

காண்கம் - காண்போதும்

சிறிது - சிறிது காலம்; ciṟitu   n. சிறு-மை. That whichis small, trifling or insignificant; அற்பமானது.இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99).

முழுப்பொருள்
தலைவி தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறாள் நெஞ்சே தலைவர் வந்தவுடன் விரைந்த்ச்சென்று அவரை தழுவாதே, தீண்டாதே, புணராதே - அவரிடம் நட்புப்பாராட்டாதே என்று. அவர் என்னை தழுவமுடியாமல் படும் துன்பத்தை நாம் சிறிது நேரம் பார்க்கலாம். அவர் என்னை விட்டு தொடர்ந்து எத்தனைநாட்கள் பிரிந்து இருந்தார் - என்னால் அப்பொழுது எல்லாம் தொடவே முடியவில்லை. சிறிது நேரம் தானே. ஒன்றும் ஆகிவிடாது. 

இச்செய்கையானது ஒருவகையில் அவர்கள் இருவருக்கும் நடுவே ஊடல். பொய் பிணக்கு என்றும் சொல்லலாம். ஆனால் சிறிதளவு ஊடல் பின்பு கூடலில் இன்பத்தை அதிகரிக்கும். அது புணர்ச்சியின்பத்தை இன்னும் அதிகம் ஆக்கும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது , இருவர் நெஞ்சும் புணர்ச்சி விதும்பாது புலக்கக் கருதியவழி ஒருவரோடு ஒருவர் புலத்தல் . அதிகார முறையையும் இதனானே விளங்கும் .]

(வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற்பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது.) அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக்கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்து சென்று புல்லாதே; இத்தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக. (அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள், புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி ஐகாரம் 'கடம்பூண்டொருகால் நீ வந்தை' (கலித்.குறிஞ்சி.27) என்புழிப்போல, முன்னிலை வினை விகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக்குறிப்புக்கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.).

மணக்குடவர் உரை
நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்: அவ்விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக. இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புலவிக் குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.

மு.வரதராசனார் உரை
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

சாலமன் பாப்பையா உரை
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

உப்பமைந் தற்றால் புலவி

குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல், இனிமை, பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

அமைந்து -  அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. (கந்தபு.உருத்திரர்கே. 6.)--v. Is like, of the same kind,impers. sing. finite appellative verb; அதுபோன்றது.--part. An adverbial word of comparison; ஒர் உவமவுருபு (தொல். பொ 286, உரை )

அமைந்தற்றால் - உணவின் அளவிற்கேற்ப / சுவைக்கேற்ப அமைவது போன்றது

புலவி - ஊடல்; வெறுப்பு; பிணக்கு
அது - அதானது
சிறிது - சிறிய அளவு,சிறுமை, சின்ன
மிக்க - மிகுந்த; உயர்ந்த.
மிக்கற்றால்
நீள - நெடுந் தொலைவாக; நெடுங் காலமாக; வெகு தொலைவில்.
விடல் - முற்றும் நீங்குகை (Leaving;renunciation) ; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
நாம் அன்றாடும் வாழ்வதற்கு உணவை உண்ணுகிறோம். உணவுகளில் பல சுவைகள் உள்ளன. பல நாடுகளில் பல உணவுவகைகள் இருக்கின்றன. பல பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. பல மசாலா சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் (நான் அறிந்த வரையில்) உப்பு என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மக்களாலும் உணவில் பொதுவாக சேர்த்துக்கொள்ளப்படும்  ஒரு பொருள். சுவையற்று இருக்கும் உணவிற்கு சிறிது உப்பு சேர்ப்பதனால் உணவில் சுவை கூடுகிறது. அவரவர் சுவைக்கேற்ப உணவில் உப்பின் அளவு மாறு படும். ஆனால் பொதுவாக யாரும் ஒரு அளவிற்கு மேல் உப்பை சேர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் உப்பு கரிக்க துவங்கிவிடும். உவர்ப்பான சுவையினை நமது நாக்கு ஏற்றுக்கொள்ளாது.

ஆதலால் உப்பினை சிறிது அளவே சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகம் ஆனாலும் உணவு உவர்ப்பாகிவிடும். உணவின் நற்சுவைக்கு தேவையான சிறிதளவு உப்பைப் போலவே காதல் வாழ்க்கை சுவைக்க காதலர்களுக்கு நடுவே சிற்சில பிணக்குகள் (ஊடல்) விளையாட்டுக்கள் இருக்கலாம். இந்த ஊடல் முடிந்ததும் கூடலில் வரும் இன்பத்தில் ஊடலின் சிறப்பை சுவைக்கலாம். [குறல் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் 1326 - உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்]  ஆனால் இந்த பிணக்குகள் சிறிதுக்காலம் மட்டுமே நீடிக்க வேண்டும். நெடுந்நேரம் நீடித்தால் அது வாழ்க்கைக்கு உவர்ப்பினை கொடுக்கும். சுவை குறையும், காதல் குறையும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(புலவி தீர்ந்து வாயில் நேரும்வகை தோழி சொல்லியது.)

புலவி உப்பு அமைந்த அற்று -புலவி கலவி இன்பஞ் செய்தற்கு வேண்டிய அளவாயிருத்தல்; உப்புச் சமைத்தவுணவு இன்சுவையாதற்கு வேண்டும் அளவினதாயிருத்தல் போலும்;சிறிது நீள விடல் அது மிக்க அற்று - இனி, அப்புலவியை அவ்வளவினுஞ் சிறிது மிக விடுதல் அவ்வுப்பு அளவிற்கு மிஞ்சினாற் போலும்.

பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல, நாள்தொறும் நுகர்ந்து வரும் கலவியின்பம் நாளடைவிற் சுவைகுன்றியபோது அதற்குச் சுவையூட்டுதலின், புலவியை உப்பு என்றாள். ஆயினும் உப்பு மிக்கவிடத்து உணவுச்சுவை கெட்டாற்போல், புலவி அளவிற்குமேல் நீண்டவிடத்துக் கலவியின்பங்கெடும் என்றவாறாம். புலவியை நீளவிடுதலாவது, கலவிமேலெழுந்த குறிப்பும் ஆசையும் அடங்குமளவு புலத்தல் , வாயில் நேர்விக்கின்றாளாதலின், சிறிதும் நீளவிடலாகாது என்றாள். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.

மணக்குடவர் உரை
நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு

குறள் 1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
ஊடல் - ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல். பொய்க்கோபம் கொள்ளுதல், சிணுங்குதல், கருத்து வேறுபாட்டால் வரும் (சிறிய) பிணக்கு

உணங்க- உணங்கு-தல் - uṇaṅku-   5 v. intr. [K.oṇagu, M. uṇaṅṅu.] 1. To dry, as grain,vegetables or fish; உலர்தல் தினைவிளைத்தார் முற்றந்தினையுணங்கும் (தமிழ்நா. 154). 2. To become gaunt,as the body by fasting; to be emaciated; tobecome reduced; மெலிதல் ஊடலுணங்க விடுவாரோடு (குறள், 1310). 3. To be dejected in mind;to languish; சிந்தை வாடுதல் உணங்கிய சிந்தையீர்(கந்தபு. மோன. 21). 4. To shrink, shrivel; சுருங்குதல் உணங்கரும் புகழ் (காஞ்சிப்பு. நாட்டுப். 1). 5.To pine away, droop, become listless; செயலறுதல் உணங்கிடுங் கரணமென்னில் (சி. சி 4, 7).  

உணங்கல் - உலர்ந்தபொருள்; உலர்த்தியதவசம்; வற்றலிறைச்சி; உணவு; உலர்ந்தபூ.

உணங்கு - உலரு, வாடு, சுருங்கு, சிந்தைவாடு

விடுதல் - நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

விடுவாரோடு - விடுவார் உடன்

என் - எந்தன்

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சம் - மனம்

கூடுவேம் - கூடல் கொள்ள முனைப்புடன் இருப்பது
கூடல் - மதுரை, சோலை, பொருந்துகை; புணர்தல்(புணர்ச்சி); நதியின் சங்கமுகம் (the mouth of a river), நதிகள் ஒன்றோடொன்று கூடும்இடம், ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப் பிரிந்ததலைவி அவன் வரும் நிமித்தமறியத் தரையில் சுழிக்கும் சுழிக்குறி:அடர்த்தியான தோப்பு.

என்பது - என்று என்பது

அவா - ஆசை, பேராசை, ஆசைப்பெருக்கம், எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.

முழுப்பொருள்
என்னுடன் உனக்கு கருத்து வேறுபாடு இருந்த பொழுது அல்லது பொய்யாக என்னுடன் கோபம் கொண்டு என்னுடன் நீர் பிணக்கு கொண்டாய், சண்டைப் போட்டாய், பேசாமல் இருந்தாய், திட்டினாய், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாய். அப்படி இருக்கையில் என் மனமும், நானும் வாடிப் போனோம். நீர் அப்போது என்னை வந்து சமாதானம் செய்யவில்லை.

ஆனால் என்னை அப்படி துயரில் ஆழ்த்தி வாட விட்டவரை என் (வெக்கம் கெட்ட மனசு) மனம் (வெறுக்க வேண்டும் அல்லவா ? ஆனால்) உன்னுடன் கூட வேண்டும், புணர்ச்சிக் கொள்ள வேண்டும், இன்புற வேண்டும் என்று நினைக்கிறது விரும்புகிறது. இதற்கு காரணம் உன்மேல் என் நெஞ்சம் கொண்ட ஆசை, விருப்பம், காதல் வேறேதும் இல்லை.

(முன்பு இந்த அதிகாரத்தில்

ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்)

பரிமேலழகர் உரை
இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.
விளக்கம் 
(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.)

மணக்குடவர் உரை
என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடுவேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால். இத புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

சாலமன் பாப்பையா உரை
ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

உதாரணம்: ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(புலவி நீங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புலவி தீர்வாளாய்ச் சொல்லியது.)

ஊடல் உணங்க விடுவாரோடு - ஊடல்கொண்ட போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாடவிடுகின்றவரோடு; என் நெஞ்சம் கூடுவேம் என்பது - என் உள்ளம் கூடியின்புறுவேம் என்று, கருதுகிறதற்குக் கரணியம்; அவா - அதன் ஆசையேயன்றி வேறன்று.

இதற்குப் பரிமேலழகருரை வருமாறு -

(உணர்ப்புவயின் வாராவூடற்கட்டலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது.)

ஊடல் உணங்க - தானூடற்கண்ணே மெலியா நிற்கவும்; விடுவாரோடு கூடுவேம் என்பது என்னெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேமென்று என்னெஞ்சம் முயறற்கேது தன்னவாவே பிறிதில்லை.

என்பதற்கேது என இருக்கவேண்டியது. 'என்பது' எனக் கருமகம் (காரியம்) கரணமாக (காரணமாக) ச்சார்த்திக் கூறப்பட்டது.

உதாரணம்: கவிமனம் (சுட்டியை சொடுக்கவும்)

திரைப்பாடல்கள்

1) பொன் மானே கோபம் ஏனோ (ஒரு கைதியின் டைரி)
2) என் கண்மணியே கண்மணியே (சின்ன வாத்தியார்)

3) அத்திக்காய் காய்  (பலே பாண்டியா) (பாடலின் அசைகள் பிரித்துப் பொருள்: தமிழ்ப்பாட்டு வலையத்தில் (சுட்டியை சொடுக்கவும்))

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

கன்னிக்காய் ஆசைக்காய் காதல்கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக் காய்
(கன்னிக்காய்..)
மாதுளங்காய் ஆனாலும் என்னுள்ளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ

இரவுக்காய் உறவுக்காய் எங்கும் இந்த ஏலக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக்காய்
(இரவுக்காய்..)
உருவம் காய் ஆனாலும் பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

ஏலக்காய் வாசனைப்போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
(ஏழக்காய்..)
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
(அத்திக்காய்..)

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர்குரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுப்போல் வெண்ணிலவே சிரித்தாயோ
(உள்ளதெல்லாம்..)
கோதை என்னை காயாதே கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: ஜமுனாராணி, TM சௌந்தர்ராஜன், PB ஸ்ரீநிவாஸ், P சுசீலா
வரிகள்: கண்ணதாசன்